சல்மான்கான் படத்தில் சமந்தா, தமன்னா
|பாலிவுட்டில் சல்மான்கான் நடிக்கும்‘நோ என்ட்ரி’ படத்திலும் சமந்தா மற்றும் தமன்னா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர், சல்மான்கான். இவர் பாலிவுட் பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலை பெற்றுத் தரும் நடிகராக மாறுவதற்கு, 2005-ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான 'நோ என்ட்ரி' படமும் ஒரு காரணம். இதில் பிளேபாய் கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடித்திருந்தார். தமிழில் 2002-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற 'சார்லி சாப்ளின்' படத்தின் ரீமேக்தான் இந்த 'நோ என்ட்ரி.'
தமிழில் பிரபுதேவா நடித்த கதாபாத்திரத்தில் சல்மான்கானும், பிரபு நடித்த கதாபாத்திரத்தில் அனில்கபூரும் நடித்திருந்தனர். பிபாசா பாசு, இஷா தியோல், லாரா தத்தா, செலினா ஜெட்லி ஆகிய நாயகிகள் முக்கிய பங்காற்றினர். இந்தப் படத்தை அனீஸ் பஸ்மே இயக்கியிருந்தார். ரூ.20 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், அந்த நேரத்தில் ரூ.80 கோடியை வசூலித்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது பற்றி சல்மான்கான் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறதாம். இந்தப் படத்தையும், முதல் படத்தை இயக்கிய அனீஸ் பஸ்மேதான் இயக்குவார் என்கிறார்கள். அதோடு இந்தப் படத்தில் நாயகிகளாக நடிக்க சமந்தா, தமன்னா ஆகிய இருவரையும், சல்மான்கான் பரிந்துரை செய்திருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
கடந்த சில வருடங்களாக, தென்னிந்தியாவில் இருந்து உருவாகிச் செல்லும் பான் இந்தியா திரைப்படங்கள் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருகின்றன. குறிப்பாக தெலுங்கு சினிமா உலகில் இருந்து இந்தி மொழிக்கு செல்லும் திரைப்படங்கள் வெகுவாக ரசிக்கப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, தெலுங்கில் முன்னணி நடிகைகளாக இருக்கும் சமந்தா மற்றும் தமன்னாவை, 'நோ என்ட்ரி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வைக்கலாம் என்று சல்மான்கான் முடிவு செய்திருப்பதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.