திரைக்கு வரும் நிதின் கட்காரி வாழ்க்கை படம்
|நிதின் கட்காரி வாழ்க்கை படம் மராத்தி மொழியில் ‘கட்காரி' என்ற பெயரில் விரைவில் திரைக்கு வருகிறது. இதர மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட இருக்கிறது.
சினிமாவில் அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை பின்புலமாக கொண்ட 'பயோபிக்' படங்கள் அவ்வப்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன.
அந்தவகையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரியின் வாழ்க்கை வரலாற்று படம், 'கட்காரி' என்ற பெயரில் படமாகி இருக்கிறது.
இதில் நிதின் கட்காரியின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள், இதுவரை சொல்லப்படாத விஷயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நிதின் கட்காரியாக, ராகுல் சோப்ரா நடித்துள்ளார். முன்னணி நடிகர்-நடிகைகளும் நடித்துள்ளனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் அனுராக் பூஜாரி கூறுகையில், "நிதின் கட்காரியின் அரசியல் பயணம் பலருக்குத் தெரியும். ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கையும், இளமையும் மிகவும் சுவாரசியமானவை. அந்த பயணத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் முயற்சி தான் இது'', என்றார்.
மராத்தி மொழியில் தயாராகியுள்ள 'கட்காரி' படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதர மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட இருக்கிறது.
தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.