கதைக்கு முக்கியத்துவம் தரும் நித்யாமேனன்...!
|'நல்ல கதாபாத்திரமாக இருந்தால் நடிக்க ஒப்புக்கொள்வேன்' என நடிகை நித்யாமேனன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கேரளாவை சேர்ந்த நித்யாமேனன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். அனைத்து மொழி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் நித்யாமேனன் அளித்துள்ள பேட்டியில், "என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என நினைக்க மாட்டேன். நல்ல கதாபாத்திரமாக இருந்தால் நடிக்க ஒப்புக்கொள்வேன். கமர்சியல் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் அல்லது நடிக்க கூடாது என்ற நிபந்தனைகளும் இல்லை.
எனக்கு கதைகள் பிடிக்காமல் நிறைய படங்களை நிராகரித்தேன். கதைக்கு அதிக முக்கியத்துவம் தருகிறேன். எனது நடிப்புக்கு மொழி எல்லைகள் எதையும் வைத்துக் கொள்ளவில்லை. சிலர் நீங்கள் தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கலாமே ? தெலுங்கு படங்களில் நடிக்கலாம் இல்லையா? என்றெல்லாம் கேட்கிறார்கள்.
எனக்கு தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளை நன்றாக பேச தெரியும். ஏதாவது சினிமா, வெப் தொடர் வாய்ப்புகள் வந்தால் அதன் ஸ்கிரிப்ட்டை மட்டும்தான் படிப்பேன். எந்த மொழி என்று பார்க்க மாட்டேன். மொழி பாகுபாடு இல்லாமல் என்னிடம் வரும் எல்லா கதைகளையும் படிப்பேன்'' என்றார்.