'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் அப்டேட்
|‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் அடுத்த பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'. இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான, 'கோல்டன் ஸ்பாரோ' பாடல் வெளியானது. இப்பாடலுக்கு நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் அறிவு வரிகளில் தனுஷ், ஜி.வி. பிரகாஷ், அறிவு மற்றும் சுப்லாஷ்லினி உள்ளிட்டோர் பாடிய இப்பாடல், ரசிகர்களிடம் கவனம் ஈர்த்ததுடன் யூடியூபில் 3.2 கோடி பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பலரும் மடிசார் புடவையில் இப்பாடலுக்கு ரீல்ஸ் செய்து வைரலாக்கினர்.
இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த பாடல் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என்றும் இதனை தனுஷ் பாடியுள்ளதாகவும் ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.