'சூது கவ்வும் 2' படத்தின் புதிய பாடல் வெளியீடு
|'சூது கவ்வும் 2' படத்துக்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார்.
சென்னை,
கடந்த 2013-ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சூது கவ்வும்'. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டார்க் காமெடி பாணியில் உருவான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. 'சூது கவ்வும் 2' படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கியுள்ளார். இதில் நடிகர் 'மிர்ச்சி' சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஹரிஷா, ராதா ரவி, கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர், கராத்தே கார்த்தி, ரகு, யோக் ஜேபி, அருள்தாஸ், கல்கி, கவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு கார்த்திக் கே.தில்லை ஒளிப்பதிவு செய்துள்ளார். எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார். இக்னேஷியஸ் அஸ்வின் படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் 'சூது கவ்வும் 2' படத்தின் டீசர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'என்ன நடக்கும்' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த பாடலை கவுதம் பரத்வாஜ் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.