சென்னை
விரைவில் புதிய பாதை 2-ம் பாகம் உருவாகும் - நடிகர் பார்த்திபன்
|பார்த்திபனின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் புதிய பாதை 1989-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை பார்த்திபனே டைரக்டு செய்து நடித்து இருந்தார். நாயகியாக சீதா வந்தார்.
இளம்பெண் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடியை திருமணம் செய்து கொள்வதும், இதனால் அந்த ரவுடியின் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதும் திரைக்கதையில் இருந்தது.
புதிய பாதை 2-ம் பாகம் உருவாகும் என்று ஏற்கனவே பார்த்திபன் தெரிவித்து இருந்தார். தற்கால டெக்னாலஜியை பயன்படுத்தி இந்த படத்தை உருவாக்குவேன் என்றும் கூறியிருந்தார். ஆனாலும் பட வேலைகளை தொடங்கவில்லை.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் இன்றைய தலைமுறைக்கு ஒரு புதிய பாதையை போடுங்கள். புதிய பாதை 2-ம் பாகம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டு பார்த்திபனுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்து பார்த்திபன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் "தற்போது தயாராகி வரும் படம் முடிந்ததும் புதிய பாதை 2-ம் பாகம் உருவாகும்'' என்று தெரிவித்து உள்ளார். விரைவில் புதிய பாதை 2 படப்பிடிப்பை தொடங்க பார்த்திபன் திட்டமிட்டு உள்ளார்.