சீனு ராமசாமி இயக்கும் புதிய படம்
|இயக்குனர் சீனு ராமசாமி புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி டைரக்டர்களில் ஒருவர் சீனு ராமசாமி. இவர் இயக்கிய `தென்மேற்கு பருவக்காற்று' படத்தில்தான் விஜய்சேதுபதி கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் தேசிய விருதை வென்றது. மேலும் சீனுராமசாமி இயக்கத்தில் வந்த தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களும் வரவேற்பையும், விருதுகளையும் பெற்றன.
விஜய்சேதுபதியை வைத்து இயக்கிய `மாமனிதன்' படமும் தொடர்ந்து சர்வதேச விருதுகளை குவித்து வருகிறது. அடுத்து புதுமுகங்கள் நடிக்கும் படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார். படத்துக்கு `கோழிப்பண்ணை செல்லத்துரை' என்று பெயர் வைத்து இருப்பதாக போஸ்டர் மூலம் தெரிவித்து உள்ளார்.
இந்த படத்துக்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். கிராமத்து காதல் கதையம்சத்தில் உருவாகிறது. படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை எஸ்.பி.சரண் பாட, பாடல் பதிவுடன் பட வேலைகள் தொடங்கி உள்ளன. இந்த படத்தை விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் அருளானந்த் தயாரிக்கிறார். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.