'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் சமூக வலைதளங்களில் வைரல்
|கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
சென்னை,
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 வருடங்களுக்கு பின், இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்தது.
இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக, இந்தியன் 3 அதாவது மூன்றாவது பாகத்தையும் இயக்குனர் சங்கர் இயக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. எனவே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை முடித்த கையேடு, மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.
இரண்டாம் பாகத்தின் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது ஏப்ரல் 19-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் துவங்கி, பல கட்டமாக நடைபெற உள்ளதால் தேர்தல் முடிந்ததும் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி மே 24-ம் தேதி, 'இந்தியன் 2' படம் பான் இந்தியா படமாக, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் சித்தார்த். ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், சமுத்திரகனி, மனோபாலா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ள இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.