'7ஜி ரெயின்போ காலனி' 2-ம் பாகத்தில் புது நாயகி
|இன்னும் ஓரிரு மாதங்களில் ‘7ஜி ரெயின்போ காலனி' படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.
இளைஞர்கள் கொண்டாடும் படங்களை இயக்கியவர் செல்வராகவன். 2004-ம் ஆண்டில் ரவி கிருஷ்ணா-சோனியா அகர்வால் நடிப்பில் இவர் இயக்கிய '7ஜி ரெயின்போ காலனி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது.
19 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் 2-ம் பாகம் எடுக்க, இயக்குனர் செல்வராகவன் தயாராகி இருக்கிறார். அதன்படி இன்னும் ஓரிரு மாதங்களில் '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.
முதல் பாகத்தை போலவே, இந்த படத்திலும் ஹீரோவாக ரவிகிருஷ்ணா நடிக்கிறார். ஆனால் இந்த முறை சோனியா அகர்வாலுக்கு பதிலாக, வேறொரு நடிகை நடிக்கவுள்ளார். 'ராங்கி' படத்தில் திரிஷாவின் அண்ணன் மகளாக நடித்த அனஸ்வர ராஜன் தான் இந்த புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
20 வயது அனஸ்வர ராஜன், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இதுவரை குழந்தை நட்சத்திரமாகவும், சிறிய வேடங்களிலும் நடித்து வந்த அவர், செல்வராகவன் படம் மூலமாக கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார்.
அதேபோல இந்த படத்துக்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் 2-ம் பாகம் எப்படி இருக்கப்போகிறதோ... என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர்.