சன்னி லியோன் வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு
|தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் சன்னி லியோன். ஓ மை கோஸ்ட் படத்திலும் நடித்து இருந்தார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.
சன்னி லியோனை சில வருடங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்பந்தம் செய்து இருந்ததாகவும் ஆனால் அதில் அவர் பங்கேற்காமல் மோசடி செய்து விட்டதாகவும் ஷியாஸ் குஞ்சு முகமது என்பவர் மாநில குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
தனக்கு எதிராக போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி சன்னிலியோன் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது சன்னி லியோன், அவரது கணவர் டேனியல் வெபர் மற்றும் அவரது ஊழியர் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ள மோசடி வழக்கை ரத்து செய்ய கோர்ட்டு விரும்புகிறது என்றும், சன்னிலியோன் கிரிமினல் குற்றம் எதுவும் செய்யவில்லை என்றும் தேவையில்லாமல் அவர் துன்புறுத்தப்படுகிறார் என்றும் நீதிபதி தெரிவித்தார். வழக்கு விசாரணையை வருகிற 31-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.