< Back
சினிமா செய்திகள்
நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் இருந்து நீக்கம்...!
சினிமா செய்திகள்

நயன்தாரா நடித்துள்ள 'அன்னபூரணி' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் இருந்து நீக்கம்...!

தினத்தந்தி
|
11 Jan 2024 1:35 PM IST

மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இடம்பெற்றது தொடர்பாக படத்தை இணைந்து தயாரித்த ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

சென்னை,

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'அன்னபூரணி'. நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது.

இந்தபடம் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருப்பதாக படக்குழுவினரின் மீது சமீபத்தில் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்திலிருந்து அன்னபூரணி படத்தை நீக்க வேண்டும் என்று மும்பையில் உள்ள நெட்பிளிக்ஸ் அலுவலகத்திற்கு முன்பு விஷ்வ இந்து பரிஷர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இருந்து 'அன்னபூரணி' திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இடம்பெற்றது தொடர்பாக படத்தை இணைந்து தயாரித்த ஜீ ஸ்டூடியோஸ் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த விவகாரம் தொடர்பாக எங்கள் இணை தயாரிப்பாளர்களான டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கும் வரையில் அன்னபூரணி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இடம்பெறாது' என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்