நெட்பிளிக்சில் வெளியாகும் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆவணப்படம்!
|இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி குறித்த ஆவணப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாகிறது.
மும்பை,
தெலுங்கில் மட்டுமல்லாது இந்தியளவில் பிரம்மாண்ட இயக்குனர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. 2001-ம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர்-1 என்ற படத்தின் மூலம் இயக்குனராக தன் திரை வாழ்வை ஆரம்பித்த ராஜமவுலி தொடர்ந்து சிம்ஹத்ரி, சை, சத்ரபதி உள்ளிட்ட படங்களை இயக்கி கமர்சியல் இயக்குனராக வெற்றி பெற்றார். இவையனைத்தும் எஸ்.எஸ்.ராஜமவுலியை சாதாரண இயக்குனராகவே அடையாளப்படுத்தியது. ஆனால், 2012-ம் ஆண்டு இவர் இயக்கிய 'நான் ஈ' திரைப்படம் கதை ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் நாடு முழுவதும் பேசப்பட்டது. தமிழிலும் அப்படம் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
இதன் வெற்றியைக் கணக்கில் வைத்த ராஜமவுலி இனிமேல் குறைந்த பட்ஜெட்டில் கமர்சியல் கதைகளை இயக்கவே கூடாது என்கிற முடிவில் 3 ஆண்டுகள் கடின உழைப்பால் 2015-ம் ஆண்டு இந்தியாவே திரும்பிப்பார்த்த பாகுபலி திரைப்படத்துடன் வந்தார். உலகளவிலும் இந்தியாவிலிருந்து இப்படி ஒரு படம் வந்திருக்கிறதா என வியக்கும் அளவுக்கு அதன் கதாபாத்திர வடிவமைப்புகளும் வி.எப்.எக்ஸ் காட்சிகளும் பேசப்பட்டன. இதன் இரண்டாம் பாகமான பாகுபலி - 2 வெளியாகி உலகளவில் ரூ.1850 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இறுதியாக, ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் ரூ.1350 கோடி வரை வசூலித்து ராஜமவுலியை இந்தியத் திரை வரலாற்றில் முக்கியமான ஆளுமையாகக் காட்டியது.
இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் சினிமாவில் ராஜமவுலியின் பங்களிப்பை கூறும் விதமாக, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிலிம் கம்பானியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து "மார்டர்ன் மாஸ்டர்ஸ் (modern masters)" என்கிய பெயரில் அவர் குறித்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளனர். இதனை, ராகவ் கண்ணா இயக்கியுள்ளார். மேலும், இந்த ஆவணப்படம் ராஜமவுலியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகிறது.