'ஜெயிலர் - 2' படம் தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகுமா?
|நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை,
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்து ரூ. 650 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது. இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்தனர். இதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு தனித்தனியாக காசோலைகள் மற்றும் சொகுசு கார்களை வழங்கினார். மேலும், படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக அளித்தார்.
ஜெயிலர் படத்திற்குப் பிறகு நெல்சன் புதிய படத்தின் கதை தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்தார்.தற்போது நடிகர் ரஜினிகாந்த்தும் த.செ.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வேட்டையன் படம் வருகிற அக்டோபர் 10 அன்று வெளியாகிறது.
இந்த நிலையில், லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கும் ரஜினி, அதற்கு அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தில் இணைவார் என செய்திகள் வெளிவந்துள்ளன.ஜெயிலர் படம் வெளியாகி நாளை (ஆகஸ்ட் 10) ஒரு ஆண்டு நிறைவடைவதைத் தொடர்ந்து, ஜெயிலர் - 2 படத்திற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.