டெல்லியில் இயக்குனர் அமீரிடம் 11 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய என்.சி.பி. அதிகாரிகள்
|மறு விசாரணை தேவைப்படும் பட்சத்தில் இயக்குனர் அமீர் மீண்டும் ஆஜராக வேண்டும் என என்.சி.பி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9ம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.
இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படங்களை தயாரித்ததும் தெரியவந்துள்ளது.
இயக்குனர் அமீர் கைதான ஜாபர் சாதிக்கின் நண்பர் என்பதும் இவரும் சேர்ந்து காபி ஷாப் ஒன்றை இணைந்து தொடங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஜாபர் சாதிக் உடன் இயக்குனர் அமீருக்கு உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தலாம் என தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில் விசாரணைக்கு வரும் 2ம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி அமீருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது.
இந்தநிலையில் அமீர் நேற்று காலை டெல்லியில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து ஆஜரானார். காலை 9 மணி அளவில் வந்த அவரிடம் பகல் 12 மணி அளவில் விசாரணை தொடங்கப்பட்டது.
இந்த விசாரணையின் போது அமீரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஜாபர் சாதிக்குடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?, எத்தனை ஆண்டுகளாக பழக்கம்? என்பது குறித்து கேட்டுள்ளனர். ஜாபர் சாதிக்கும், அமீரும் இணைந்து ஓட்டல் தொழிலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதற்கு அவர்கள் செய்த முதலீடு விவரங்கள் பற்றியும் கேட்கப்பட்டன.
மேலும் ஜாபர் சாதிக்கின் தயாரிப்பில் 'இறைவன் மிகப்பெரியவன்' என்ற படத்தை அமீர் இயக்கியுள்ளார். இந்த படத்துக்காக அமீருக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு? கொடுக்கப்பட்ட முன்பணம் எவ்வளவு என்பதை பற்றியும் விசாரித்துள்ளனர்.
இப்படியாக விசாரணை மதியம் மற்றும் மாலை நேரத்தை கடந்து இரவிலும் தொடர்ந்தது. அதிகாரிகளின் பல்வேறு கேள்விகளுக்கு இயக்குனர் அமீர் பிடி கொடுக்காமல் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள் மேலும் பல கிடிக்குப்பிடி கேள்விகளை அமீரிடம் முன்வைத்துள்ளனர்.
இயக்குனர் அமீரின் செல்போனை முழுவதுமாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தை முழுவதுமாக வீடியோ பதிவு செய்த அதிகாரிகள், அமீர் அளித்த வாக்குமூலத்தையும், ஜாபர் சாதிக் அளித்த வாக்குமூலத்தையும் முழுவதுமாக ஒப்பிட்டு பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மறு விசாரணை தேவைப்படும் பட்சத்தில் இயக்குனர் அமீர் மீண்டும் ஆஜராக வேண்டும் என என்.சி.பி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 11 மணி நேர விசாரணைக்கு பின்னர் அமீரை என்.சி.பி. அதிகாரிகள் விடுவித்ததை அடுத்து அவர் சென்னை திரும்பியுள்ளார். இதற்கிடையே இயக்குனர் அமீர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில், "அனைத்து ஊடக நண்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். டெல்லியில் விசாரணை முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறேன். இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். அதுவரை என்னை யாரும் அழைக்க வேண்டாம் "என பதிவிட்டுள்ளார்.