ஹேக் செய்யப்பட்ட பிரபல நடிகையின் எக்ஸ் கணக்கு
|தனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும் தேவையில்லாத பதிவுகளை ரசிகர்கள் தவிர்க்கும்படியும் நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
சென்னை,
'ஐயா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கிறார். தமிழ் திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறக்கும் நயன்தாரா 'ஜவான்' படத்தில் ஷாருக்கானுடன் நடித்து இந்தியில் அறிமுகமானார்.
இந்த படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியதோடு நயன்தாராவை இந்தி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக்கியது. தற்போது, மலையாளத்தில் நிவின் பாலிவுடன் 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படத்தில் நடித்து வருகிறார்.
நடிப்பை தவிர்த்து தனது காஸ்மெடிக் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதுதவிர்த்து தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பாக படங்களையும் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை நயன்தாராவின் எக்ஸ் கணக்கு கிரிப்டோ விஷமிகளால் சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட எக்ஸ் கணக்குகிரிப்டோ தொடர்பான இரண்டு பதிவுகள் நயன்தாராவின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டன. பின்னர் அப்பதிவுகள் நீக்கப்பட்டன. தற்போது நயன்தாராவின் எக்ஸ் கணக்கு மீட்கப்பட்டதாகத் தெரிகிறது.
இது குறித்து நயன்தாரா, "எனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. எதாவது புதியதாக பதிவுகள் தென்பட்டிருந்தால் அதைப் பொருட்படுத்தவேண்டாம்" என தற்போது கூறியுள்ளார்.