நயன்தாரா பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்ட 'டெஸ்ட்' படக்குழு...!
|நடிகை நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்து 'டெஸ்ட்' படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். சமீபத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்த 'ஜவான்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அறிமுகமான முதல் இந்தி படத்திலேயே நயன்தாரா பெரிய அளவில் பேசப்பட்டு விட்டார்.
சினிமா தவிர சொந்தமாக பல தொழில்களிலும் நயன்தாரா ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அழகு சாதனப்பொருட்களை சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
இதற்கிடையே தமிழ்ப்படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது. இந்த படத்தின் மூலம் பிரபல பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து 'டெஸ்ட்' படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.