மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா
|நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாரா 7 வருடங்களாக காதலித்த டைரக்டர் விக்னேஷ் சிவனை சமீபத்தில் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். முகூர்த்தம் முடிந்த கையோடு இருவரும் திருப்பதிக்கு சாமி கும்பிட சென்றனர். அங்கு திருப்பதி மாட வீதிகளில் கணவருடன் போட்டோ ஷீட் நடத்தியபோது நயன்தாரா காலில் காலணியுடன் இருந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. திருப்பதி தேவஸ்தானம் நயன்தாரா செயலை கண்டித்தது. அவருக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் எச்சரித்தது. நடந்த சம்பவத்துக்கு விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டார்.
தற்போது தம்பதியினர் கேரளா சென்றுள்ளனர். இந்த நிலையில் நயன்தாரா மீது இன்னொரு புகார் கிளம்பி உள்ளது. மாமல்லபுரத்தில் திருமணம் நடந்தபோது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் கடற்கரை பகுதிக்கு செல்ல முடியவில்லை. கடற்கரை பொது இடம். அங்கு நயன்தாரா திருமணம் நடந்த நாளில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கவில்லை. இது மனித உரிமை மீறல் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது. இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.