குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி...!
|நயன்தாரா - விக்னேஷ் சிவன் தங்களது குழந்தைகளுடன் ஓணம் பண்டிகை கொண்டாடும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பல பகுதிகளில இருக்கும் கேரள மக்கள், ஓணம் பண்டிகைக்கு தங்கள் சொந்த மாநிலத்துக்கு வந்து உறவினர்களுடன் மகிழ்ச்சியாக ஓணம் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.
பொதுவாக ஓணம் பண்டிகை என்றால் தங்க நிற பார்டர் கொண்ட வெண்பட்டு நிறத்திலான புடவை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு ஓணத்தை கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது.
திரையுலகிலும் ஓணம் பண்டிகையை வரவேற்க தயாராகிவிட்டனர். குறிப்பாக நடிகைகள் இப்போதே கேரளாவின் பாரம்பரிய புடவை அணிந்து அசத்தல் போஸ் கொடுத்து, அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஓணத்தை வரவேற்க தயாராகிவிட்டனர். சிலர் இதற்காகவே தனி போட்டோஷூட்டும் நடத்தியிருக்கிறார்கள்.
நட்சத்திர காதல் ஜோடியான நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். இதற்கிடையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தங்களது குழந்தைகளுடன் ஓணம் பண்டிகை கொண்டாடுவது போன்ற புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த படத்திலும் அவர்களது குழந்தைகளின் முகத்தை அவர்கள் காட்டவில்லை.
இதேபோல நடிகைகள் ஷோபனா, அமலாபால், மியா ஜார்ஜ், பியர்ல் மானி, மடோனா செபாஸ்டியன், அனு சித்தாரா, மஞ்சிமா மோகன், நமீதா பிரமோத், பூர்ணா, நவ்யா நாயர், ரீமா கல்லிங்கல், நிகிலா விமல், நிக்கி கல்ராணி உள்பட பலர் இப்போதே ஓணம் பண்டிகையை வரவேற்று சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.
இதனால் ஓணம் பண்டிகை இப்போதே களைகட்ட தொடங்கியிருக்கிறது.