பெண் வேடத்தில் நவாசுதீன் சித்திக்
|பாலிவுட்டில் கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிக்கும் ஒரு சில நடிகர்களில், நவாசுதீன் சித்திக்கும் ஒருவர். இவர் ஒரு யதார்த்தமான நடிகரும் கூட. இவர் தமிழ் மொழியில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
1999-ம் ஆண்டு சினிமாத் துறைக்குள் நுழைந்த அவர், ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் வலுவான குணச்சித்திர வேடங்களும், எதிர்மறையான கதாபாத்திரங்களும் கிடைத்தன. கிடைத்த கதாபாத்திரங்களில் எல்லாம் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வந்த நவாசுதீன் சித்திக், 2012-ம் ஆண்டு வெளியான 'கேங்ஸ் ஆப் வாஷிப்பூர் பார்ட் 2' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
2013-ம் ஆண்டு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'மஞ்ஹி' திரைப்படத்திலும் நாயகனாக நடித்தார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து பல படங்களில் நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் கலவையான நடிப்புகளை கொடுத்து வந்தார்.
நவாசுதீன் சித்திக், பெண் வேடத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் சமீபத்தில் அந்தப் படத்திற்கான போஸ்டர் வெளியிடப்பட்டது. 'ஹட்டி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில்தான் நவாசுதீன் சித்திக், பெண் வேடம் ஏற்றுள்ளார். இதில் பெண் தாதாவாக அவர் நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அந்தப் படத்தின் முதல் போஸ்டரில் பெண் வேடத்தில் மார்டன் உடையில் நவாசுதீன் சித்திக் அமர்ந்திருக்கும் காட்சி, ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் புகைப்படத்தை, சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி பலதரப்பட்ட மக்களும், சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் அந்தப் புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.