'செல்பி' தொல்லையால் நவ்யா நாயர் அதிருப்தி
|தமிழில் அழகிய தீயே படம் மூலம் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்த நவ்யா நாயர் மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு சில ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்து விட்டு இப்போது மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். இதுகுறித்து நவ்யா நாயர் அளித்துள்ள பேட்டியில், "சினிமாவில் எனது மறு பிரவேசம் சிறப்பாக உள்ளது. ரசிகர்கள் வரவேற்பு எனது எதிர்பார்ப்புக்கும் மேலாக இருக்கிறது. நான் நிறைய கதைகள் கேட்கிறேன். அவற்றில் இருந்து சில கதைகளை மட்டுமே தேர்வு செய்கிறேன்.
கடந்த சில வருடங்களாக சினிமா துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. நான் நடித்த படப்பிடிப்பு அரங்கில் நிறைய பெண்கள் இருந்தனர். அது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. கேரவன் வசதி செய்து கொடுப்பதிலும் மாற்றம் தெரிந்தது. முன்பெல்லாம் கதாநாயகன், கதாநாயகிக்கு மட்டுமே கேரவன் கொடுத்தார்கள். தற்போது எல்லோருக்கும் வசதி செய்து கொடுக்கிறார்கள்.
இப்போது செல்பி தொந்தரவும் எல்லை மீறுவதாக உள்ளது. உடல்நலம் குன்றி, ஆஸ்பத்திரியில் இருக்கும்போதும் செல்பி எடுக்க வருகிறார்கள். ஒருவர் இறந்தபோது அங்கு சென்று இருந்தோம். அங்கேயும் செல்பி எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். இது வருத்தம் அளித்தது. நிலைமையை புரிந்து ரசிகர்கள் நடந்து கொள்ள வேண்டும்'' என்றார்.