சினிமாவை விட்டு விலக நாசர் முடிவு?
|சினிமாவை விட்டு விலக நாசர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உடல்நிலையை கருத்திக் கொண்டு தான் சினிமாவில் இருந்து விலக அவர் முடிவு செய்திருக்கிறாராம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற குணச்சித்திர நடிகராக உயர்ந்தவர் நாசர். முதலில் கே.பாலசந்தர் இயக்கிய கல்யாண அகதிகள் படத்தில்தான் அறிமுகமானார். மணிரத்னத்தின் நாயகன் படத்தில் நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் பெயர் வாங்கி கொடுத்தது.
தொடர்ந்து மணிரத்னத்தின் ரோஜா, பம்பாய் மற்றும் கமல்ஹாசனுடன் மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி உள்பட நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து முன்னணி குணச்சித்திர நடிகராக உயர்ந்தார். நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
இந்த நிலையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் ஆச்சார்யா தெலுங்கு பட நிகழ்ச்சியில் நாசர் பேசும்போது, ''சினிமா மீது எனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கிறது. ஆனாலும் படங்களில் தொடர்ந்து நடிக்க வயது ஒத்துழைக்கவில்லை. ஒரு வேளை எதிர்காலத்தில் நான் மட்டுமே நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் கேட்டுக்கொண்டால் அப்போது மட்டும் நடிப்பது பற்றி யோசிப்பேன்" என்றார்.
ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்கள் அட்வான்ஸ் வாங்கிய படங்கள் ஆகியவற்றில் நாசர் தற்போது நடித்து வருவதாகவும் இந்த படங்களை முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலக திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.