'தி கோட்' படத்திற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் நானி
|சென்னையில் நடைபெற்ற புரமோசன் நிகழ்ச்சியில் 'தி கோட்' படத்திற்கு நடிகர் நானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. நடிகர் நானி தற்போது 31-வது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதற்கு தமிழில் 'சூர்யாவின் சனிக்கிழமை' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் 'சரிபோதா சனிவாரம்' என்ற பெயரில் வெளியாக உள்ளது.
'அடேட சுந்தரா' படத்தை இயக்கிய விவேக் ஆத்ரேயே இப்படத்தை இயக்கியுள்ளார். டிடிவி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தநிலையில் இப்படம் வருகிற 29-ந் தேதி வெளியாக உள்ளது. அதற்காக படக்குழுவினர் புரமோசன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். படக்குழுவினர் நேற்று புரமோசன் பணிக்காக சென்னை வந்தனர். பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது நடிகர் நானி வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி வெளியாக உள்ள 'தி கோட்' படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தில் வெளியாகும் 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தின் வெற்றியை தொடர்ந்து, செப்டம்பர் மாதம் வெளியாகும் 'தி கோட்' படத்திற்கும் ஆதரவளித்து ரசிகர்களை நானி ஊக்குவித்தார். இந்தநிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான 'தி கோட்' படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.