சிறந்த திரைப்படத்திற்கான சர்வதேச விருதை வென்ற 'ஹாய் நான்னா'
|'ஹாய் நான்னா' திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
சென்னை,
இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடித்த திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்தார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவான இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைத்தார்.
வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. 'ஹாய் நான்னா' திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் 'ஹாய் டாட்' என்ற பெயரில் உலக முழுவதும் வெளியானது.
பின்னர் 'ஹாய் நான்னா' திரைப்படம் ஜனவரி 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.72 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இது நானி நடித்து வெளியான படங்களில் அதிக வசூல் செய்த இரண்டாவது படமாகும். முதல் இடத்தில் அதே வருடம் வெளியான தசரா உள்ளது. இப்படம் ரூ.120 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்நிலையில், 'ஹாய் டாட்' என்ற பெயரில் சர்வதேச அளவில் வெளியான 'ஹாய் நான்னா' திரைப்படம், ஏதென்ஸ் சர்வதேச கலை திரைப்பட விழாவில் அவர்களின் மார்ச் பதிப்பில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.