பிரியங்கா மோகனை 'நேச்சுரல் ஸ்டார்' என்று அழைத்த நானி
|'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
சென்னை,
தெலுங்கு சினிமாவின் 'நேச்சுரல் ஸ்டார்' என்ற அழைக்கப்படுபவர் நடிகர் நானி. இவர் நடித்த 'அந்தே சுந்தரானிகி' படத்தின் இயக்குனர் விவேக் ஆத்ரேயாவுடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்திற்கு தமிழில் 'சூர்யாவின் சனிக்கிழமை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்த இந்த திரைப்படத்தை 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை தயாரித்த டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் டிவிவி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற 29-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னையில் நடந்த படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட நானி, தமிழ் மக்களின் அன்பை பார்த்து வியந்து போவதாக கூறினார். மேலும் சென்னை விமான நிலையத்திற்கு வரும் போதெல்லாம் ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பு என்னை பிரம்மிக்க வைக்கிறது என்றார். இந்த படத்தை பொறுத்தவரை எஸ்.ஜே.சூர்யாதான் முதல் ஹீரோ என்றார்.
பின்னர், பிரியங்கா மோகனை பற்றி பேசினார். அவரது நடிப்பு அற்புதமாக உள்ளது. இறைவன் அவருக்கு நவரச பாவங்களை வெளிப்படுத்தும் முக அமைப்பை கொடுத்துள்ளார். அவர் கண் அசைவில் ஏராளமான விசயங்களை சொல்லி விடும் அளவிற்கு இயற்கையான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவர்தான் 'நேச்சுரல் ஸ்டார்', அவருடைய நடிப்புகள் அனைத்தும் இயற்கையாகவே இருக்கும் என்று பாராட்டி பேசினார். இது நான் அவருடன் நடிக்கும் 2-வது படமாகும் என்று கூறினார். இந்த படம் அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும் என்றும் கூறினார்.