'நானே வருவேன்' வெற்றி கொண்டாட்டம் - செல்வராகவனுக்கு மாலை அணிவித்து கலைப்புலி எஸ்.தாணு வாழ்த்து
|இயக்குனர் செல்வராகவனை நேரில் சந்தித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை,
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் 'நானே வருவேன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 29-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை புவன் ஸ்ரீனிவாசன் மேற்கொண்டுள்ளார்.
இந்த படத்திற்கு முதல் நாளிலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும், இடைவேளைக்கு முந்தைய காட்சி உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்ததாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் செல்வராகவனை நேரில் சந்தித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவருக்கு மாலை அணிவித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.