நாம் ராமரின் பக்தர்கள் - பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ரேவதி
|இந்தியில் பிர் மைலேஞ்ச், மும்பை கட்டிங், மலையாளத்தில் கேரள கபே படங்களை இயக்கியுள்ளார்.
சென்னை,
தமிழ், தெலுங்கு திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரேவதி. மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ரேவதி ஏற்கனவே 2002-ல் மித்ர மை பிரண்ட் என்ற ஆங்கில படத்தை இயக்கினார். தொடர்ந்து இந்தியில் பிர் மைலேஞ்ச், மும்பை கட்டிங், மலையாளத்தில் கேரள கபே படங்களையும் டைரக்டு செய்தார். தற்போது 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குனராக களமிறங்கியுள்ளார்.
இந்த நிலையில் அவர் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதில், "அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது ஒரு மறக்க முடியாத நாள். ராமரின் முகத்தை பார்த்ததும் என் உணர்வுகள் கிளர்ச்சியை ஏற்படுத்தின. இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்துக்களாக இருக்கும் நாம் நமது நம்பிக்கைகளை நமக்குள்ளேயே வைத்திருக்கிறோம். அடுத்தவர்களை காயப்படுத்த கூடாது என நினைத்து நாம் அப்படி செய்கிறோம்.
மதசார்பற்ற இந்தியாவில் நமது ஆன்மிக நம்பிக்கைகளை தனிப்பட்ட முறையிலேயே வைத்திருக்க வேண்டும் என்கிற நிலை இருக்கிறது. ஆனால் ராமரின் வருகை இந்த விஷயத்தை பலரிடம் மாற்றி இருக்கிறது. நாம் ராமரின் பக்தர்கள் என முதல் முறை சத்தமாக சொல்ல இருக்கிறோம். ஜெய் ஸ்ரீ ராம்" என பதிவிட்டுள்ளார். நடிகை ரேவதியின் இந்த கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.