'கடைசி விவசாயி' பட இயக்குனர் வீட்டில் திருட்டு... தேசிய விருதையும் எடுத்து சென்ற மர்ம நபர்கள்
|வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் ரொக்கம், 5 பவுன் தங்க நகையை திருடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை,
தமிழ் திரைப்படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் இயக்குநர் மணிகண்டன். இவர் காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற படங்களை இயக்கி உள்ளார். இதில் காக்கா முட்டை, கடைசி விவசாயி போன்ற படங்கள் தேசிய விருதுகளை வென்றன.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழில் நகரில் வசித்து வந்த இவர் தற்போது படவேலைகள் காரணமாக சென்னையில் தங்கி உள்ளார். இந்நிலையில் மதுரையில் உள்ள அவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.1 லட்சம் ரொக்கம், 5 பவுன் தங்க நகையை திருடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடைசி விவசாயி படத்திற்காக வாங்கிய தேசிய விருது மற்றும் பதக்கங்களையும் எடுத்து சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மணிகண்டன் சென்னையில் இருந்து வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட பிறகுதான் திருடப்பட்ட பொருட்கள் குறித்த முழு விவரம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.