< Back
சினிமா செய்திகள்
இளம் நடிகை ஆகான்க்சா துபே மரணத்தில் மர்ம முடிச்சுகள்; பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்
சினிமா செய்திகள்

இளம் நடிகை ஆகான்க்சா துபே மரணத்தில் மர்ம முடிச்சுகள்; பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்

தினத்தந்தி
|
5 April 2023 6:27 PM IST

பிரபல போஜ்புரி இளம் நடிகை ஆகான்க்சா துபே மரணத்தில் பல மர்ம முடிச்சுகள் இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்து உள்ளது.

வாரணாசி,

பிரபல போஜ்புரி பட நடிகை ஆகான்க்சா துபே (வயது 25). உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி தூக்கு போட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்பி வீடியோ

சம்பவத்திற்கு முந்தின நாள் இரவு, பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியபடி, செல்பி வடிவிலான வீடியோ ஒன்றை பதிவு செய்து, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.

இந்நிலையில், தூக்கு போட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து உள்ளது. நடிகர் மற்றும் பாடகரான சமர் சிங் என்பவருடன்ஆகான்க்சா காதலில் இருந்த நிலையில், காதலர் தினத்தில் இன்ஸ்டாகிராமில் தங்களது காதலை அவர்கள் உறுதிப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில், படப்பிடிப்பு ஒன்றுக்காக ஓட்டலுக்கு வந்த அவர் மரணம் அடைந்து இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியது. அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என கூறப்படுகிறது.

சக நடிகை

இதுபற்றி சக நடிகையான காஜல் ராகவானி வெளியிட்ட செய்தியில், உன்னால் உன்னை கொல்ல முடியும் என்று ஒருபோதும் நான் நம்பமாட்டேன்.

கடவுள் இருக்கிறார். அவர் நிச்சயம் உனது உயிருக்கான விலையை கொடுக்க செய்வார். இன்றில்லா விட்டாலும் நாளை, அது நடக்கும்.

உயிரை கொடுப்பதிலோ அல்லது யாருடைய உயிரையும் எடுப்பதிலோ, உண்மையான அன்பின் விலை வழங்கப்படுவதில்லை. வாழ்ந்தபோது இல்லாத மகிழ்ச்சியை இப்போது நீ பெற்றிருப்பாய் என நம்புகிறேன். நீ எங்கிருந்தபோதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

ஆகான்க்சா தாயார் குற்றச்சாட்டு

இதேபோன்று, ஆகான்க்சா துபேவின் தாயார் மது கூறும்போது, சமருடன் ஆகான்க்சா 3 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார். ஆனால், ஒரு பைசா கூட கொடுத்தது இல்லை. அந்த வகையில் சமர் கொடுக்க வேண்டிய பணம் ரூ.3 கோடி இருக்கும்.

ஒரு ஆல்பத்திற்கு ரூ.70 ஆயிரம் வீதம் சமர் பணம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும், ஆகான்க்சா பணம் கேட்கும்போது, சமர் அவளை அடித்து, சித்ரவதை செய்து துன்புறுத்தி வந்துள்ளார். பிற கலைஞர்களுடன் பணியாற்ற முயற்சி செய்தபோதும், அவளை சமர் துன்புறுத்தி வந்து உள்ளார்.

சமரின் பல ஆல்பத்தில் ஆகான்க்சா பணியாற்றி உள்ளார் என கூறியுள்ளார். ஆகான்க்சா துபே மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை என அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

வாரணாசி போலீசார், மது துபேவின் புகாரின் பேரில் சமர் சிங் மற்றும் அவரது சகோதரர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை

இந்நிலையில், ஆகான்க்சாவின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதில், நடிகை ஆகான்க்சா வயிற்றில் உணவோ, ஆல்கஹாலோ இல்லை. அவர் சம்பவத்தின்போது குடிபோதையில் இல்லை என்றும், அவரது வயிற்றில் அடையாளம் தெரியாத 20 மில்லி லிட்டர் அளவிலான திரவம் காணப்பட்டது என தெரிவிக்கின்றது.

அவரது வயிற்றில் உள்ள மியூக்கஸ் சவ்வானது மூடியிருந்தது. அவரது மணிக்கட்டு பகுதியில் காயம் உள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது.

இதேபோன்று ஆகான்க்சாவின் தாயாரான மது துபே கூறும்போது, சமர் சிங்கின் சகோதரர் சஞ்சய் சிங், ஆகான்க்சாவை கொலை செய்ய போகிறேன் என மிரட்டி உள்ளார். இதுபற்றி தொலைபேசியில் அவர் என்னிடம் தெரிவித்து உள்ளார் என மது துபே கூறியுள்ளார்.

இதனால், சமர் மற்றும் அவரது சகோதரர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கு பதிவாகி உள்ளது.

இந்த சம்பவத்தில் கருப்பு ரக ஆடம்பர காரில் ஆகான்க்சாவை ஓட்டலில் விட்டு சென்ற சந்தீப் சிங் என்பவரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

முதல்-மந்திரிக்கு கடிதம்

இதனை தொடர்ந்து, வழக்கில் ஆகான்க்சாவின் சார்பிலான வழக்கறிஞர் சேகர் திரிபாதி முதல்-மந்திரி ஆதித்யநாத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். ஓட்டல் அறையில் சிலரால் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார் என அதில் தெரிவித்து பல விசயங்களை சுட்டி காட்டி உள்ளார்.

அதில், பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவரும் முன் அவசர கதியில் கட்டயாத்தின் பேரில் ஆகான்க்சாவின் உடல் தகனம் செய்யப்பட்டு உள்ளது சந்தேகம் எழுப்புகிறது. அவரது தாயார் கேட்டு கொண்டும் அதன்படி நடக்காமல் தகனம் நடந்து உள்ளது.

போஜ்புரி திரை துறையில் நன்கு தெரிந்த பல நபர், ஆகான்க்சா பணியாற்றியதற்கான உரிய தொகையை கொடுக்கவில்லை என தெரிவித்து உள்ளார். அதனால், சி.பி.ஐ. அல்லது சி.பி.-சி.ஐ.டி. விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இசை ஆல்பங்கள்

ஆகான்க்சா, முதன்முறையாக மேரி ஜங் மேரா பைஸ்லா என்ற படத்தில் தனது 17 வயதில் நடித்து அறிமுகம் ஆனார்.

அதன்பின், போஜ்புரியில் வெளியான முஜ்சே ஷாதி கரோகி என்ற படத்திலும், வீரோன் கே வீர், பைட்டர் கிங், கசம் பைதா கர்ணே கி 2 மற்றும் பிற படங்களிலும் அவர் நடித்து உள்ளார்.

இவர், தனியாக 60 சூப்பர் ஹிட் இசை ஆல்பங்களையும் வெளியிட்டு உள்ளார். போஜ்புரியில் பிரபல நடிகர்களான கேசரி லால் யாதவ், பவன் சிங் மற்றும் பிரதீப் பாண்டே ஆகியோருடனும் ஒன்றாக நடித்து உள்ளார்.

மேலும் செய்திகள்