'என் இசை பயணம் தலைநகரில் மட்டுமல்ல, அனைத்து ஊர்களிலும் தொடரும்' - இசைஞானி இளையராஜா
|இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி சமீபத்தில் கும்பகோணத்தில் நடைபெற்றது.
தேனி,
தேனிமாவட்டத்திலுள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் இசைஞானி இளையராஜா. 1976-ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில், பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுதி வெளியான படம் தான் 'அன்னக்கிளி'. இப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார் இசைஞானி இளையராஜா.
இதுவரை இளையராஜா பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 -க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளார். இவரது 1,000-வது படம் இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை'. மேலும் இவர் 2010-ம் ஆண்டு 'பத்ம பூஷன்' விருதையும் 2018-ம் ஆண்டு 'பத்ம விபூஷன்' விருதையும் பெற்றார்.
இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் சென்னையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அவரது எவர் கிரீன் பாடல்கள் பாடப்பட்டன. அந்த இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.சரண், மது பாலகிருஷ்ணன், ஸ்வேதா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து சமீபத்தில், இளையாராஜாவின் இசை நிகழ்ச்சி கும்பகோணத்தில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியின் போது, மழை குறுக்கிட்டது. ஆனால் அதனையெல்லாம் மீறி பொதுமக்கள் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதனை பார்த்து வியந்து போன இளையராஜா "பெரும் மழையிலும், என் இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த கும்பகோணம் மக்களே, உங்களின் ஆதரவை மறக்கமுடியாது, இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊர்களில் நடைபெறும்" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.