என் குழந்தைகளுக்கு திகில் திரைப்படங்கள் பிடிக்கும்...அதனால்தான் - குஷ்பு
|அரண்மனை 4 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
சென்னை,
சுந்தர்.சி இயக்கத்தில் தற்போது அரண்மனை படத்தின் 4-ம் பாகம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் சுந்தர்.சி, தமன்னா, ராஷிகண்ணா, கோவை சரளா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அப்போது குஷ்பு பேசியதாவது, இந்தப்படத்தின் மூன்று பாகங்களும் வெற்றிகரமாகப் போக முக்கிய காரணம் சுந்தர்.சிதான். அவருடன் நான் 30 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். அவர் எப்போதும் எப்படி வித்தியாசமாக ரசிகர்களை மகிழ்விக்கலாம் என யோசித்துக் கொண்டே இருப்பார்.
வீட்டில் இருக்கும் இரு குழந்தைகளுக்கும் திகில் திரைப்படங்கள் பிடிக்கும். அதனால்தான் அவரும் இந்த ஜானரில் தொடர்ந்து படமெடுக்கிறார். அரண்மனை படத்தை திரையரங்கில் குடும்பத்தோடு ரசிக்கும் ரசிகர்கள்தான் இந்த வெற்றிக்கு காரணம். அவர்களுக்கு நன்றி.
ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் ஒன்றாக இருக்க முடியாது என்று சொல்வார்கள். ஆனால் இந்த படத்திற்கு தமன்னா, ராஷிகண்ணா நன்றாக ஒத்துழைப்பு தந்தார்கள். கோவை சரளா மேம் மற்றும் நடித்த அனைவருக்கும் நன்றி.
ஹிப்ஹாப் ஆதி சிறப்பாக இசையமைத்துள்ளார். மற்ற 3 பாகங்களை விட இப்படம் இன்னும் அட்டகாசமாக இருக்கும். இறுதியாக எங்கள் மகிழ்ச்சிக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் என் கணவர் சுந்தர். சிக்கு நன்றி" இவ்வாறு பேசினார்.