சந்தோஷத்தில் என் இதயத்துடிப்பே நின்றுவிடும் போல் இருந்தது - நடிகை மீனாட்சி சவுத்ரி
|'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார்.
சென்னை,
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் மீனாட்சி சவுத்ரி மிகவும் சந்தோசமாக இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ''விஜய்யுடன் நடிக்கப் போகிறேன் என்று தெரிந்ததும் சந்தோஷத்தில் என் இதயத்துடிப்பு நின்றுவிடும் போல் இருந்தது. விஜய்யுடன் ஜோடி சேரும் வாய்ப்பு அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைக்காது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிதான். இப்பொழுது அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.
விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவேண்டும் என்று இயக்குனர் கூறினார். இதனை கேட்டதும் என் கால்கள் நடுங்கி விட்டது. படப்பிடிப்பின்போது விஜய் என்னோடு நடந்து கொண்ட விதம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அவருக்கு நான் தீவிர ரசிகை'' என்று கூறினார்.