'என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது'- நடிகர் ரஜினிகாந்த்
|அமிதாபச்சனுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.
சென்னை,
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்திற்கு 'தலைவர் 170' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை 'ஜெய்பீம்' படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். 'தலைவர் 170' படத்தின் படக்குழு குறித்த விவரத்தை தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
அதன்படி இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், நடிகைகள் மஞ்சுவாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் 'தலைவர் 170' படத்தில் நடிகர் அமிதாப் பச்சன், நடிகர் பகத் பாசில், நடிகர் ராணா டகுபதி நடிக்கவுள்ளனர்.
ரஜினிகாந்தும், அமிதாப் பச்சனும் இணைந்து கடந்த 1991-ம் ஆண்டு வெளியான 'ஹம்' படத்தில் நடித்திருந்தனர். அதன்பிறகு தற்போதுதான் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் அமிதாபச்சனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இதில், 33 ஆண்டுகளுக்குப் பிறகு, த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் லைகாவின் "தலைவர் 170" படத்தில் எனது வழிகாட்டியான திரு. அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது, என்று பதிவிட்டுள்ளார்.