எனது முதல் காதல் -சோபிதா துலிபாலா
|மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் சோபிதா துலிபாலா. இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.
கதாபாத்திரங்கள் தேர்வில் தனக்கென பிரத்யேகமான பாணியை அனுசரிக்கும் சோபிதா துலிபாலா தனது சொந்த வாழ்க்கை மற்றும் சினிமா சம்பந்தமான விஷயங்களை பகிர்ந்தார். அதில் இருந்து...
இதுவரை சாதித்தது என்ன?
பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, படங்களில் மணிரத்னம், ஏ.ஆர். ரகுமான் போன்ற லெஜெண்டுகளுடன் இணைந்து நான்கு பாடல்களில் நடனம் ஆடியது உண்மையில் என் வாழ்க்கையில் பிரத்தியேகமானது. சினிமாவில் சாதித்து விட்டதாக நினைக்கவே முடியாது. இன்னும் சாதிக்க வேண்டியது இருந்து கொண்டே இருக்கும். பெரிய சூப்பர் ஸ்டார்களுக்கு கூட சாதித்து விட்டோம் என்ற எண்ணம் வருவதே இல்லை.
உங்கள் மீது வரும் வதந்திகள் பற்றி?
அதைப் பற்றி எல்லாம் நான் கண்டு கொள்வதை விட்டு விட்டேன்.சில வதந்திகளுக்கு நாம் பதில் அளித்தாலும் கூட மீண்டும் மீண்டும் அவற்றை வேண்டுமென்றே பரப்புபவர்கள் அதையே செய்து கொண்டு தான் இருப்பார்கள். அதற்காக கவலைப்பட்டு நேரத்தை வீணாக்கிக் கொள்வதில் எனக்கு இஷ்டமில்லை.
உங்களது முதல் காதல் பற்றி....?
பள்ளி நாட்களில் என் ஸ்கூல் கேப்டன் மீது எனக்கு கிரஷ் இருந்தது. அதை தெரிவிக்க நிறைய தடவை முயன்றேன்.
ஆனால் அவன் என்னை கண்டு கொள்ளவே இல்லை. நான் பள்ளியில் முதல் மாணவி தான். இருந்தாலும் அவன் என்னை கண்டு கொள்ளாததால் விட்டுவிட்டேன். அதன் பிறகு யார் மீதும் எனக்கு அது போன்ற எண்ணம் ஏற்படவில்லை. அந்த சம்பவம் எனது வளர்ச்சிக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.அவனது செய்கையால் நான் இன்னும் முன்னேறி காட்ட வேண்டும் என்ற வெறி எனக்குள் ஏற்பட்டது.
உங்களுக்கு யாராவது காதல் கடிதம் எழுதி இருக்கிறார்களா?
மும்பையில் கல்லூரியில் படிக்கும் பொழுது நிறைய பேர் கடிதம் எழுதினார்கள். ஆனால் அப்போது நான் மிகவும் மெச்சூர் ஆகி விட்டேன். அந்த கடிதங்களை கண்டு கொண்டதே இல்லை.