'எனது படம் ஆஸ்கார் விருதுக்கு தகுதியானது' - நடிகர் மாதவன்
|‘எனது படம் ஆஸ்கார் விருதுக்கு தகுதியானது’ என நடிகர் மாதவன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நடிகர் மாதவன் நடித்து இயக்கிய ராக்கெட்டரி படம் கடந்த ஜூலை மாதம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுத்து இருந்தனர்.
இந்த படம் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்படும் என்று மாதவன் எதிர்பார்த்தார்.
ஆனால் குஜராத்தி படமான செலோ ஷோவை ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்ப தேர்வு செய்துள்ளனர்.
இதுகுறித்து மாதவன் கூறும்போது, ''எனது படமான ராக்கெட்டரி ஆஸ்கார் விருதுக்கு தகுதியான படம். இதுபோல் 'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்துக்கும் ஆஸ்கார் விருது பெறுவதற்கான தகுதி இருக்கிறது. ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வான 'செலோ ஷோ' குஜராத்தி படக்குழுவினரை வாழ்த்துகிறேன். அவர்கள் ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்கள். இது திரைப்பட துறையில் நாம் சிறப்பாக செயல்பட வேண்டிய காலம் ஆகும்" என்றார்.
மாதவன் நடித்துள்ள 'தோக்கா ரவுண்ட் டி கார்னர்' படம் திரைக்கு வருகிறது.