ஆதிபுருஷ் ராமருக்கு மீசை...! கர்ணன் போல் இருக்கிறார்...! நடிகை கஸ்தூரி விமர்சனம்
|ஆதிபுருஷ் போஸ்டரில் ராமரை போல் இல்லை கர்ணன் போல் இருக்கிறார்- என நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்து உள்ளார்.
சென்னை
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிபுருஷ் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்.
இந்த படம் ஆரம்பத்தில் இருந்தெ விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது. ஆனால், டீசரை பார்த்த நெட்டிசன்ஸ், படத்தின் கிராபிக்ஸ் வேலை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.
தொடர்ந்து வெளியான போஸ்டர்களும் விமர்சனத்திற்கு உள்ளானது
ஆதிபுருஷ் திரைப்படம் வருகிற ஜூன் 16-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே எஞ்சி உள்ளதால் அதன் புரமோஷன் பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகின்றன.நேற்று முன்தினம் அதன் இறுதி டிரெய்லர் வெளியிடப்பட்டது. அதுவும் விமர்சனத்திற்கு உள்ளானது.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பிரபாஸ் அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று தரிசனம் மேற்கொண்டார். மேலும் இயக்குநர் ஓம் ராவத் மற்றும் கதாநாயகி கீர்த்தி சனோன் உள்ளிட்டோரும் திருப்பதி சென்று தரிசனம் செய்த நிலையில், கீர்த்தி சனோனை வழியனுப்பும்போது இயக்குநர் அவருக்கு முத்தம் கொடுத்ததால் அது சர்ச்சையானது. இதற்கு கோவிலுக்கு முன்பு இப்படி முத்தமிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் தற்போது கஸ்தூரி கேள்வி ஒன்று எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், "ராமர் மற்றும் லக்ஷ்மணன் மீசை மற்றும் தாடியுடன் சித்தரிக்கப்படும் பாரம்பரியம் ஏதேனும் உள்ளதா? ஏன் இந்த குழப்பமான புறப்பாடு? குறிப்பாக பிரபாஸ் இருக்கும் தெலுங்கு திரையுலகில், ஸ்ரீராமன் கதாபாத்திரத்தில் லெஜண்ட் நடிகர்கள் கச்சிதமாக நடித்துள்ளனர். ஆனால் இந்த போஸ்டரில் பிரபாஸை பார்க்கையில் ராமரை போல் தோன்றுவதற்கு பதில் கர்ணனைப் போல இருக்கிறார்" எனப் பதிவிட்டுள்ளார்.