மியூசிக்கல் டாக்டர் யுவன் சங்கர் ராஜா... கவனம் ஈர்க்கும் கான்ஜுரிங் கண்ணப்பன் புரோமோ வீடியோ..!
|'கான்ஜுரிங் கண்ணப்பன்' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை புரோமோ வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், 'கான்ஜுரிங் கண்ணப்பன்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, எல்லி அவ்ரம், ஜேஸன் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்துக்கு எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். காமெடி ஹாரர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை புரோமோ வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
இந்த புரோமோ வீடியோவில் மியூசிக்கல் டாக்டராக வரும் யுவன் சங்கர் ராஜா, காதல் தோல்வி என்று வரும் நபருக்கு 'லூசுப்பெண்ணே' பாடலையும் 'போகாதே' பாடலையும் கேட்க அறிவுறுத்துகிறார். அடுத்து வந்த நபர், அம்மா மீது பாசம் வரவில்லை என்று கூற அவரை, 'ஆராரிராரோ' பாடலை கேட்க சொல்கிறார்.
கடைசியாக வரும் நடிகர் சதீஷ் தூக்கம் வராமல் இருக்க பாடல் கேட்க, அதை யுவன் எழுதி தருகிறார். பின்னர் 'விஜய் 68' படத்தின் பாடல் அப்டேட் குறித்து சதீஷ் கேட்க வீடியோ முடிவடைகிறது. வீடியோவின் இறுதியில் படத்தின் முதல் பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.