'இதனால்தான் ராயன் படத்தில் வில்லனாக நடிக்க மறுத்தேன்' - இசையமைப்பாளர் தேவா
|ராயன் படத்தில் வில்லனாக நடிக்க மறுத்ததற்கான.காரணத்தை இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார்.
சென்னை,
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கும் 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தனுஷ் நடித்து இயக்கும் அவரது 50வது படமான 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படம் தேர்தலுக்குப் பின்னர் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கும் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிக்க பிரபல இசையமைப்பாளர் தேவாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் நடிக்க தேவா மறுத்துவிட்டார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் தேவா ராயன் படத்தில் வில்லனாக நடிக்க மறுத்ததுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது,
வட சென்னை வட்டார மொழியை சரளமாக பேசக்கூடிய ஒருவர் இப்படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும். அதற்காக தனுஷ் என்னிடம் வில்லனாக நடிக்க கேட்டார். ஆனால் நான் நடிக்க மறுத்துவிட்டேன். ஏனென்றால், அந்த கதாபாத்திரத்தில் நடிப்பவர் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்க வேண்டியது முக்கியம். அப்படி நடிக்காவிட்டால் அந்த பாத்திரம் சிறப்பாக அமையாது. எனக்கு அப்படி நடிக்க வருமா என்று தெரியாது. இதனால்தான் நான் ராயன் படத்தில் வில்லனாக நடிக்க மறுத்தேன். இவ்வாறு கூறினார்.