இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் ரகசிய திருமணமா...? பிரபல நடிகை விளக்கம்
|இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை திருமணம் செய்ததாக வெளியான தகவலை நடிகை புஜிதா மறுத்துள்ளார்.
ஐதராபாத்
தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தமிழில் சிங்கம், மன்மதன் அம்பு, வெடி, சாமி ஸ்கொயர், சச்சின், வில்லு, வீரம் என ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் கடைசியாக வெளிவந்த புஷ்பா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் வெற்றிக்கு இவரது பாடல்களும் முக்கிய காரணம்.
புஷ்பா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைக்க உள்ளார்.
இதுதவிர தமிழிலும் ஒரு பிரம்மாண்ட படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். அதன்படி சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் சூர்யா 42 படத்திற்கு தான் அவர் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை ஞானவேல் ராஜாவும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.
இவ்வாறு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிபடங்களிலும் பிசியாக பணியாற்றி வரும் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு தற்போது 42 வயது ஆகிறது. ஆனால் அவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில், அவர் தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னாடாவை ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை பூஜிதா தானும் தேவி ஸ்ரீ பிரசாத்தும் திருமணம் செய்துகொண்டதாக பரவும் தகவலில் துளிகூட உண்மையில்லை என தெரிவித்துள்ள அவர் எங்கிருந்து இந்த ஆதாரமற்ற தகவல் பரவியது என தனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார். அதேபோல் தான் அவருடன் டேட்டிங் எதுவும் செல்லவில்லை என்றும் தற்போது வரை சிங்கிளாகவே இருப்பதாகவும் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பூஜிதா.