'மார்க் ஆண்டனி' படத்திற்கு சான்றிதழ் வழங்க மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டனர் - நடிகர் விஷால் பரபரப்பு புகார்
|‘மார்க் ஆண்டனி’ படத்திற்கு சான்றிதழ் வழங்க மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்த 'மார்க் ஆண்டனி' திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இந்தி பதிப்பிற்காக மும்பை சென்சார் போர்டுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததாக நடிகர் விஷால் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'மார்க் ஆண்டனி' படத்தை பார்க்கவே மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ.3 லட்சம் கேட்டதாகவும், சான்றிதழ் வழங்க ரூ.3.5 லட்சம் கேட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேனகா என்ற இடைத்தரகரிடம் மொத்தம் ரூ.6.5 லட்சம் ரூபாய் பணத்தை இரண்டு தவணைகளாக கொடுத்து 'மார்க் ஆண்டனி' படத்தை இந்தியில் வெளியிட்டேன் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
மேலும் பணம் செலுத்திய வங்கி கணக்கு விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் எந்த தயாரிப்பாளருக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த விவகாரத்தை மராட்டிய முதல்-மந்திரி மற்றும் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.