'அந்த பாத்திரத்தில் இருந்து வெளிவர சிரமமாக இருந்தது' - மிருணாள் தாகூர்
|ஒரு கதாபாத்திரத்தை நேசித்துவிட்டால் அவ்வாறாகவே மாறிவிடுகிறோம் என்று மிருணாள் தாகூர் கூறினார்.
சென்னை,
துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் 'சீதா ராமம்'. இப்படம் இருவருக்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 1964-ம் ஆண்டு கால கட்ட பிண்ணனியில் படத்தை எடுத்து இருந்தனர்.
காஷ்மீர் எல்லையில் பணியாற்றும் ராணுவ அதிகாரி முகவரி இல்லாமல் தனக்கு வரும் காதல் கடிதங்களை படித்து அதை அனுப்பிய பெண்ணை கண்டுபிடிக்கிறார். அவளுடன் அவரால் சேர்ந்து வாழ முடிந்ததா என்பதை உருக்கமாக படமாக்கி இருந்தனர். காதல் கடிதங்களை அனுப்பும் பெண்ணாக மிருணாள் தாகூர் நடித்து இருந்தார். இதில் ராஷ்மிகா மந்தனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் சீதா கதாபாத்திரத்தில் இருந்து வெளிவர சிரமமாக இருந்தது என்று மிருணாள் தாகூர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, மிகவும் கடினமானது என்னவென்றால் ஒரு படத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது இதயம் உடைவதுபோல் இருப்பதுதான். ஒரு கதாபாத்திரத்தை நேசித்துவிட்டால் அவ்வாறாகவே மாறிவிடுகிறோம். சில நாட்கள் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாது. அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம்தான் சீதா மகாலட்சுமி. சீதா கதாபாத்திரத்தில் இருந்து வெளிவர மிகவும் சிரமமாக இருந்தது. இவ்வாறு கூறினார்.
தற்போது விஜய் தேவரகொண்டா ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ள திரைப்படம் 'பேமிலி ஸ்டார்'. இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.