சினிமா விமர்சனம் - ரங்கோலி
|மாநகராட்சி பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் நாயகன் ஹமரேஷை சலவை தொழிலாளியான அவரது தந்தை முருகதாஸ் தனியார் பள்ளியில் சேர்க்கிறார். அந்த பாடங்களை கற்க ஹமரேஷ் சிரமப்படுகிறார். சக மாணவர்கள் லோக்கல் என்று கேலி செய்து ஒதுக்குகிறார்கள்.
மாணவி பிரார்த்தனா மீது ஹமரேஷுக்கு ஈர்ப்பு வருகிறது. இதுவே ஒரு கட்டத்தில் பிரச்சினையாகி செய்யாத குற்றத்துக்காக ஹமரேஷை பள்ளியில் இருந்து நீக்கும் நிலைக்கு செல்கிறது. ஹமரேஷ் என்ன முடிவு எடுத்தார் என்பது மீதி கதை..
அறிமுக நாயகன் ஹமரேஷ் பள்ளி மாணவனாகவே வாழ்ந்திருக்கிறார். மாணவர்களுக்கு உரிய உணர்வுகளை வெளிப்படுத்துவதில் எவ்வித பதட்டமும் இல்லாமல் அருமையாக நடித்து கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் இவருக்கான எதிர்காலம் சிறப்பாகவே இருக்கிறது.
பள்ளி மாணவியாக வரும் பிரார்த்தனா நடிப்பில் தேர்ச்சி பெற்றாலும் அவருடைய குழந்தைத்தனமான முகம் கதாநாயகி வேடத்துக்கு சற்று விலகியே நிற்கிறது.
அப்பாவாக வரும் ஆடுகளம் முருகதாஸ் தன் அனுபவ நடிப்பால் கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
நாயகனின் அம்மாவாக வரும் சாய் ஸ்ரீ உடல் மொழியை மிக லாவகமாக வெளிப்படுத்தி தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை நிலைநிறுத்தி உள்ளார். அக் ஷயாவும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.
மருதநாயகம் யதார்த்தமான ஒளிப்பதிவு மூலம் கதைக்களத்துக்கு எளிதாக நம்மை அழைத்துச் செல்கிறார். கதையை தொந்தரவு செய்யாத அளவுக்கு பல இடங்களில் கேமரா வித்தையை காண்பித்துள்ள விதம் நன்று.
சக்கரவர்த்தியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் சிறப்பு.
பள்ளி மாணவர்களின் கதையில் இருக்க வேண்டிய குறும்பு, விளையாட்டு, மோதல், இனக்கவர்ச்சி என அத்தனை அம்சங்களையும் அளவாக கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் பொழுதுபோக்கான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் வாலி மோகன்தாஸ்.
தனியார் பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் உள்ள வேற்றுமையை சொல்ல முயற்சித்து அதற்கான தீர்வை வழங்குவதில் ஏற்பட்டிருக்கும் குழப்பம் பலவீனம்.