மோட்டார் சைக்கிள் விபத்து... பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்
|பிரபல ஹாலிவுட் நடிகர் டிரீட் வில்லியம்ஸ். இவர் அமெரிக்காவில் உள்ள வெர்மாண்டில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது ஒரு கார் மீது அவரது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் டிரீட் வில்லியம்ஸ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் விமானம் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. டிரீட் வில்லியம்ஸ் 1979-ல் வெளியான ஹேர் என்ற படத்தில் நடித்து பிரபலமானார். அந்த படத்தில் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அதே ஆண்டில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் உருவான 1941 என்ற படத்தில் நடித்தும் புகழ்பெற்றார்.
'தி ஈகிள் ஹாஸ் லேண்டட்' 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா', 'தி லேட் ஷிப்ட்', '127 ஹவர்ஸ்' உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். ஏராளமான தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வெப் தொடர்களிலும் நடித்து இருக்கிறார். டிரீட் வில்லியம்ஸ் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.