"பணிப்பெண்ணுக்கு தங்கவளையல், 4 லட்சம் ரூபாய் உதவி..." நயன்தாரா குறித்து மாமியார் பெருமிதம்
|பணிப்பெண்ணின் கடனை அடைக்க நடிகை நயன்தாரா ரூ.4 லட்சம் வழங்கி உதவியதாக அவரது மாமியார் தெரிவித்தார்.
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னனி நடிகை நயன்தாரா, அவரது காதலர் விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இந்த தம்பதிக்கு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்ததாக செய்தி வெளியான நிலையில், இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன.
இந்த சூழலில் முதல் முறையாக நடிகை நயன்தாராவின் மாமியாரும், ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டருமான மீனா குமாரி, சென்னை மதுரவாயலில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர், நயன்தாரா அவரது வீட்டில் பணிபுரியும் வேலையாட்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பெருமிதம் தெரிவித்தார்.
குறிப்பாக பணிப்பெண் ஒருவருக்கு ரூ.4 லட்சம் கடன் இருப்பதை அறிந்த நயன்தாரா, தனது சொந்த பணத்தை வழங்கி அந்த கடனை அடைக்குமாறு கூறியதாக மீனா குமாரி குறிப்பிட்டார். அதே போல் மற்றொரு பணிப்பெண்ணுக்கு நயன்தாராவின் தாயார் தங்கவளையல் அணிவித்ததாக அவர் கூறினார்.
நயன்தாராவின் வீட்டில் பணிபுரிபவர்கள் அவரிடம் கேட்காமல் ஒரு காபி கூட குடிக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்ட அவர், நம்பிக்கை ஏற்படும் வகையில் உண்மையாக ஒரு இடத்தில் நாம் பணிபுரிந்தால், நல்லது கெட்டது என எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று தெரிவித்தார்.