'ஜெயிலர்' படத்தில் பணியாற்றிய 300-க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு தங்க நாணயம் பரிசு..!
|'ஜெயிலர்' படத்தில் பணியாற்றிய 300-க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தங்க நாணயம் பரிசு வழங்கியுள்ளார்.
சென்னை,
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடினர்.
இப்படத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. 'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு கார் மற்றும் காசோலைகளை பரிசாக வழங்கினார்.
இந்த நிலையில் 'ஜெயிலர்' திரைப்படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது. இதில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் 'ஜெயிலர்' திரைப்படத்தில் பணியாற்றிய 300-க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார்.