< Back
சினிமா செய்திகள்
எங்கள் வீட்டில் எம்.ஜி.ஆர்.
சினிமா செய்திகள்

எங்கள் வீட்டில் எம்.ஜி.ஆர்.

தினத்தந்தி
|
13 April 2023 11:02 AM IST

1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வைத் தொடங்கிய நேரம். அன்றைக்கு திருப்பூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.ஆக இருந்தவர், சு.துரைசாமி.

அப்போது பொதுக்கூட்ட மேடையில், தன்னைப்பற்றி அவதூறாகப் பேசியதாக எம்.ஜி.ஆர். மீது அவர் திருப்பூர் கோர்ட்டில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் ஆஜராவதற்காக ஒருமுறை சென்னையில் இருந்து எம்.ஜி.ஆர். திருப்பூர் வந்தார். அவர் வந்த ரெயில் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு அதிகாலையில் வந்துசேர்ந்தது. எம்.ஜி.ஆர். வருகிறார் என்பதை அறிந்து ரெயில் நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. விடிந்தும் விடியாத அந்நேரத்தில் பொதுமக்களும், தொண்டர்களும் திரண்டுவந்து உற்சாகம் பொங்க அவரை வரவேற்றார்கள்.

இனி உஷா தியேட்டர் உரிமையாளர் முத்துசாமி எவ்வாறு எம்.ஜி.ஆரை வரவேற்றார் என்பதை தற்போது தியேட்டர் நிர்வாகத்தை கவனித்து வரும் அவருடைய மகன்கள் மனோகரன், ரவிக்குமார் ஆகியோர் கூறக் கேட்போம்.

திருப்பூருக்கு எம்.ஜி.ஆர். வருவது பற்றி தகவல் கிடைத்ததும் எங்களுடைய தந்தை மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்றார். எம்.ஜி.ஆரை எங்கே தங்கவைப்பது? ரெயில் நிலையத்தில் இருந்து அவரை எப்படி அழைத்து வருவது? அவரை எவ்வாறு கவனிப்பது? போன்ற பணிகளில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார்.

எம்.ஜி.ஆர். தங்குவதற்காக விருந்தினர் மாளிகையில் ஒருபுறம் ஏற்பாடு செய்திருந்தபோதிலும், திருப்பூர் ஷெரீப் காலனியில் உள்ள எங்கள் வீட்டையும் அவருக்காகத் தயார்படுத்தினார்.

அவர் எங்கு விரும்புகிறாரோ, அங்கு தங்கவைக்கலாம் என்பதால் அவ்வாறு செய்திருந்தார்.

எங்கள் தந்தை அப்போது ஒரு பியட் கார் வைத்திருந்தார். எம்.ஜி.ஆரை வரவேற்க அந்தக் காரில் ரெயில் நிலையம் சென்றிருந்தார். ரெயிலைவிட்டு இறங்கியதும் எம்.ஜி.ஆர். வேறு யாருடைய காரிலும் ஏறாமல், நேராக வந்து எங்கள் தந்தையின் பியட் காரில் ஏறிக்கொண்டார்.

அதுபோல் விருந்தினர் மாளிகைக்குப் போகாமல் நேரே எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார். காலை சிற்றுண்டி எங்கள் வீட்டில்தான் சாப்பிட்டார். எம்.ஜி.ஆர். தங்குவதற்காக தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தொலைபேசியில் சென்னைக்கு நேரடியாக பேசும் வகையில் (எஸ்.டி.டி) அந்த அறைக்கு பிரத்யேக இணைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. எங்கள் வீட்டில் இருந்து, அன்று 4 முறையாவது அவர் சென்னைக்குப் பேசியிருப்பார். மின்தடை ஏற்படாமல் இருப்பதற்காக எங்கள் வீட்டில் இரண்டு ஜெனரேட்டர்கள் தயாராக வைக்கப்பட்டு இருந்தன.

எம்.ஜி.ஆர். காலை சிற்றுண்டி சாப்பிட்ட பிறகு, எங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் வாஞ்சையோடு பேசிக்கொண்டு இருந்தார். எங்களின் தந்தையின் சிறப்பு பற்றி எங்களிடம் பெருமையாகக் கூறினார்.

"எனது படத்தைத் தவிர, வேறு யார் படத்தையும் திரையிடுவதில்லை என்று உங்க அப்பா உறுதியோடு இருக்கிறார் தெரியுமா?" என்று எங்களிடமே கேட்டார்.

பின்னர் கோர்ட்டுக்கு சென்றுவிட்டு மதியம் வரை எங்கள் வீட்டில் தங்கி இருந்த எம்.ஜி.ஆர். அதன்பிறகு எங்கள் உஷா தியேட்டருக்கு வந்து பார்வையிட்டுச் சென்றார்.

அந்தநாள் ஞாபகம் இன்னமும் எங்கள் நெஞ்சங்கள் நிறைய இருக்கின்றன என்று சொன்ன அவர்கள், "எம்.ஜி.ஆர்.படங்களுக்கு 'பிளாங் செக்' கொடுத்து அதை வாங்கி வினியோகித்த ஒரே டிஸ்ட்ரிபியூட்டராக எங்கள் தந்தை இருந்தார்" என்று தகப்பனாரின் பெருமைகளையும் பெருமிதத்தோடு அந்த இரு புதல்வர்களும் சொன்னார்கள்.


நான்தான் வழக்குத் தொடுத்தேன்




எம்.ஜி.ஆர். மீது அவதூறு வழக்குத் தொடர்ந்து அவரை திருப்பூருக்கு வரவழைத்தவர் சு.துரைசாமி.

முன்னாள் எம்.எல்.ஏ.வும் ம.தி.மு.க. அவைத் தலைவருமான அவரிடம் அதுபற்றி கேட்டோம். பழைய நினைவுகளை அவர் நினைவு கூர்ந்தார்.

"1972-ம் ஆண்டு, தி.மு.க. வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு திருப்பூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார்.

` இந்த ஊர், எம்.எல்.ஏ. வீட்டில் 10 ஏ.சி. ஓடுகின்றன. பெரிய நூற்பாலைகளில் அவருக்கு பங்குகள் இருக்கின்றன. அதிகமாக சொத்து சேர்த்து இருக்கிறார்!' என்று பேசினார். அந்த காலகட்டத்தில் தி.மு.க. சார்பில் திருப்பூர் தொகுதிஎம்.எல்.ஏ.வாக நான் இருந்தேன். இந்த ஊர் எம்.எல்.ஏ., என்றால் நான்தானே? என்னைத்தான் குறிப்பிட்டு பேசினார் என்று திருப்பூர் கோர்ட்டில் எம்.ஜி.ஆர். மீது அவதூறு வழக்குத் தொடுத்தேன். அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகஎம்.ஜி.ஆர். திருப்பூர் கோர்ட்டுக்கு வந்தார்.

விசாரணையின்போது, "பொதுக் கூட்டத்தில் நான் துரைசாமி என்று பெயர் குறிப்பிட்டு பேசவில்லை. பொதுவாகப் பேசினேன். இன்னாரென்று குறிப்பிட்டு பேசவில்லை" என்றார்.

நீதிபதியும், துரைசாமி என்று குறிப்பிட்டு பேசாமல் பொதுவாகத்தான் பேசியுள்ளார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.

சென்னை ஐகோர்ட்டுக்கும் வழக்கு சென்றது. அதன்பிறகு என்னிடம் சிலர் வந்து பேசியதால் வழக்கு அத்துடன் முடிவுக்கு வந்தது. 1971-ம் ஆண்டு சட்டமன்ற தொகுதி தேர்தல் பிரசாரத்தின்போது திருப்பூர் தொகுதியில் போட்டியிட்ட எனக்காக, எம்.ஜி.ஆர்., திருப்பூர் வந்து பிரசாரம் செய்தார். கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் நடந்த தி.மு.க. தேர்தல் நிதி வசூல் செய்யும் கூட்டங்களின்போது எம்.ஜி.ஆருடன் நான் கூடவே இருந்திருக்கிறேன். காரில் இருவரும் ஒன்றாகப் பயணித்து இருக்கிறோம். நன்றாகவே என்னை அவருக்கு தெரியும்.

எம்.ஜி.ஆர். மீது என்னைத் தவிர வேறு யாரும் வழக்கு தொடுக்கவில்லை. திருப்பூர் கோர்ட்டில் வழக்கு முடிந்த பிறகு சென்னை ஐகோர்ட்டில் ஒருமுறை என்னை எம்.ஜி.ஆர். சந்தித்தார். அப்போது என்னிடம் நட்புடன் பேசினார்"

இவ்வாறு நினைவுகூர்ந்தார் துரைசாமி.

மேலும் செய்திகள்