மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குநருக்கு எதிராக நடிகை பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு
|2021-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான, இயக்குநர் சிதம்பரத்தின் ஜானேமன் என்ற படத்தில் பிராப்தி நடித்திருக்கிறார்.
சென்னை,
இயக்குநர் சிதம்பரம் பொடுவால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நடிகர் கமல்ஹாசன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விக்ரம், தனுஷ் உள்ளிட்டோர் இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டினர்.
இந்த படம் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 2018 என்ற மலையாள படத்தின் வசூல் சாதனையை முறியடித்து, அதிக வசூல் ஈட்டிய பட வரிசையை நோக்கி முன்னேறி வருகிறது. மலையாள திரையுலகில் ரூ. 100 கோடி வசூல் செய்த நான்காவது படம் என்ற பெருமையை 'மஞ்சுமெல் பாய்ஸ்' பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடிகை பிராப்தி எலிசபெத் என்பவர் இந்த குற்றச்சாட்டை சமூக ஊடகம் வழியே தெரிவித்து உள்ளார்.
பிராப்தியை இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்பற்றுகின்றனர். அதில், அவர் வெளியிட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதேபோன்று, பிராப்தி வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், அந்த இயக்குநரிடம் வாட்ஸ்அப் தகவல்கள் உள்ளன என்றும் தகவல்களிலேயே ஒரு நாள் இரவு முழுவதும் செலவிடப்பட்டது என்றும் மறைமுக குற்றச்சாட்டையும் பதிவிட்டு உள்ளார்.
தொடர்ந்து அவர், ஆணின் குற்றம் சாட்டும் விரலானது, ஒரு பெண்ணை நோக்கியே எப்போதும் இருக்கும். அந்த ஆண் ஏன் அப்படி செய்துள்ளார்? என்பது உங்களுக்கு விசயமல்ல.
அவரை பற்றி வெளியே கூறும்போது, அதில் எனக்கு எந்த வலியும் இல்லையே என்றே அவர்கள் பார்க்கின்றனர். சரி. நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு கூறுங்கள் என பதிவிட்டிருக்கிறார்.
இதில் பாப்பி என்பவர் விமர்சன பகுதியில், சாட்டிங்கில் நன்றியுணர்வு விடப்பட்டு உள்ளது என கூறுகிறார். அதற்கு பிராப்தி அளித்த பதிலில், என்ன விசயத்துக்காக? எனக்கு சம்பளம் தந்தது, நான் நடிப்பு தொழிலை செய்வதற்காகவா? அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகவா? என்று ஆவேசத்துடன் கேட்டுள்ளார். இதனால், இயக்குநர் சிதம்பரம் பொடுவாலுக்கு எதிராக மலையாள திரையுலகில் மீடூ சர்ச்சை வெடித்துள்ளது.
2021-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜானேமன் படத்தில் பிராப்தி நடித்திருக்கிறார். இது இயக்குநர் சிதம்பரத்துக்கு அறிமுக படம். அப்போதும் சில சர்ச்சைகள் வெளியாகின. இதுதவிர, ஊபர், அஜியோ, பிரிட்டானியா உள்ளிட்ட பல்வேறு விளம்பர படங்களிலும் பிராப்தி நடித்துள்ளார்.