சினிமா விமர்சனம்- மெரி கிறிஸ்துமஸ்
|கத்ரினா கைப் அழகை ரசித்தபடியே அவருடன் பயணிப்பது, குழந்தையிடம் பாசம் காட்டுவது என்று உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் விஜய் சேதுபதி.
கொலை வழக்கில் சிறை தண்டனை முடிந்து வீட்டுக்கு வரும் விஜய்சேதுபதி ஏற்கனவே இறந்துபோன தனது தாய் நினைவால் சோகத்தில் மூழ்குகிறார். அன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் ஓட்டலுக்கு சாப்பிட செல்கிறார். அங்கு குழந்தையுடன் இருக்கும் கத்ரினா கைப்பை சந்திக்கிறார். கத்ரினாவுடன் அவரது வீட்டுக்கே செல்கிறார்.
அப்போது கணவன் போதை பொருளுக்கு அடிமையாகி தனது நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்தும் வேதனைகளை கத்ரினா பகிர்கிறார். வீட்டில் குழந்தையை தூங்க வைத்து விட்டு மீண்டும் வெளியே போகிறார்கள்.
சிறிது நேரத்துக்கு பிறகு இருவரும் வீட்டுக்கு திரும்பும்போது அங்கே கத்ரினா கைப் கணவன் துப்பாக்கியால் மார்பில் சுட்டபடி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்கிறார்கள்.
கத்ரினா கைப் கணவர் மரணத்தில் இருக்கும் மர்மங்கள் என்ன? விஜய்சேதுபதி என்ன முடிவு எடுத்தார்? என்பதே மீதி கதை.
விஜய்சேதுபதி யதார்த்தமான நடிப்பால் மனதில் நிற்கிறார். கத்ரினா கைப் அழகை ரசித்தபடியே உடன் பயணிப்பது. குழந்தையிடம் பாசம் காட்டுவது, கத்ரினாவுக்கு உதவுவது என்று உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கிளைமாக்சில் எடுக்கும் எதிர்பாராத முடிவால் மனதை கனக்க வைக்கிறார்.
கத்ரினா கைப் அழகு சிலையாய் வசியம் செய்கிறார். கணவன் கொடுமையை சொல்லி அழும்போது அனுதாபம் அள்ளுகிறார். அவரது இன்னொரு முகம் அதிரவும் நெகிழவும் வைக்கிறது.
ராஜேஷ், போலீஸ் அதிகாரிகளாக வரும் ராதிகா, சண்முகராஜா மற்றும் ராதிகா ஆப்தே, கவின் பாபு, பரி மகேஷ்வரி ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு.
ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்வது பலகீனமாக இருந்தாலும் அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் கதையோடு ஒன்ற வைக்கிறது.
மது நீலகண்டன் கேமரா கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அழகையையும் திகிலையும் நேர்த்தியாக படம் பிடித்து உள்ளது. டேனியல் பி.ஜார்ஜ் பின்னணி இசை பலம். திரில்லர் கதையை சஸ்பென்ஸ், நகைச்சுவை, திருப்பங்களுடன் நகர்த்தி உள்ளார் இயக்குனர் ஶ்ரீ ராம் ராகவன். படத்தில் ஆங்காங்கே சொல்லப்படும் விஷயங்கள் கிளைமாக்சில் ஒன்றாக வந்து இணைவதும், காதலை புதிய கோணத்தில் உயிரோட்டமாய் சொல்லி இருப்பதும் படத்தின் தரத்தை உயர்த்தி காட்டுகிறது.