மீண்டும் திரையரங்குகளில் மெகா ஹிட் 'கில்லி'...ரசிகர்கள் உற்சாகம்
|'கில்லி' திரைப்படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
சென்னை,
தரணி இயக்கத்தில் ஸ்ரீ சூர்யா மூவீஸ் தயாரிப்பில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், மயில்சாமி, பாண்டு, போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இத்திரைப்படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'ஒக்கடு' திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
'கில்லி' திரைப்படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு, ரசிகர்களால் இன்று வரை வெகுவாக கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
படத்தின் நகைச்சுவை காட்சிகள் ,.விஜயின் வெகுளித்தனமான கதாபாத்திரம், திரிஷாவின் அப்பாவித்தனமான முக பாவனையும் இப்படத்தின் கூடுதல் கவனத்தை பெற்றது. படத்தின் பாடல்களைப் பற்றி கூறியே ஆகவேண்டும் . வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. இன்றும் காரில் பயணம் செய்யும் பொழுது அர்ஜூனர் வில்லு பாடல் கேட்காமல் பயணம் முடிவுக்கு வராது.
ஏப்ரல் 14 ஆம் தேதி 2004-ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம். இந்த ஆண்டோடு வெளியாகி 20 வருடங்கள் நிறைவடைகிறது. இதையொட்டி இப்படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கின்றனர்.