'எனக்கு எல்லாமே நீங்கள்தான் அப்பா' - விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி பதிவு
|அப்பா நீங்கள் இல்லாமல் நான் இன்று இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
சென்னை,
கீதா கோவிந்தம்', 'சர்காரு வாரி பட்டா' படங்களை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் 'பேமிலி ஸ்டார்'. இந்த படத்தில் 'சீதா ராமம்' புகழ் மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தில்ராஜூ மற்றும் சிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு கோபிசுந்தர் இசையமைத்துள்ளார்.
இந்த படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அவர் தன் அப்பாவுடன் சிறு வயதில் எடுத்த புகைப்படம் முதல் தற்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் வரை இணைத்து வீடியோவாக பகிர்ந்துள்ளார். அதனுடன் பகிர்ந்த பதிவில்,
அப்பா நீங்கள் இல்லாமல் நான் இன்று இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. நான் சிறு வயதில் எடுத்து வைத்த முதல் அடி முதல் இன்று எடுத்து வைக்கும் அடி வரை என்னுடன் இருந்து வருகிறீர்கள். என் ஹீரோ, என் பலம், என் நண்பன் எல்லாமே நீங்கள்தான். நான் உங்களை கஷ்டப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள். உங்களை பெருமைப்படுத்துவதே என் மிகப்பெரிய வெற்றி. என்றென்றும் நீங்கள்தான் என் குடும்ப நட்சத்திரம்.
வாழ்க்கை மேடும் பள்ளமும் நிறைந்தது. நீங்கள் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க நான் தினமும் உழைக்கிறேன். ஐ லவ் யூ மை சூப்பர் ஸ்டார். எங்களின் வாழ்க்கையில் உள்ள நட்சத்திரங்களைக் கொண்டாடும் வகையில் பேமிலி ஸ்டாரை உருவாக்கியுள்ளோம். குடும்பத்திற்காக போராடும் ஒவ்வொரு ஆண்,பெண்,சிறுமி, சிறுவனுக்கும் இந்தப் படத்தை அர்ப்பணிக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா பகிர்ந்த இந்த நெகிழ்ச்சி வீடியோ பதிவு தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.