கமல்ஹாசனுடன் சந்திப்பு: 'இந்தியன் 2' படத்தில் இணைந்த இந்தி வில்லன்
|இந்தியன் 2 படத்தில் நடிக்கும் பிரபல இந்தி வில்லன் நடிகர் குல்சன் குரோவர் கமலை சந்தித்த புகைப்படங்களை தனது வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கமல்ஹாசன் பங்கேற்று நடித்து வருகிறார். நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுல்பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தியன் 2 படத்தில் நடிக்க பிரபல இந்தி வில்லன் நடிகர் குல்சன் குரோவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். அவர் சென்னை வந்து படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். அப்போது கமலை சந்தித்த புகைப்படங்களை தனது வலைத்தளத்தில் பகிர்ந்து இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் நடிப்பது உற்சாகம் அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்து உள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகிறது. இந்தியன் 2 படத்தை முடித்து விட்டு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார். ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் 1987-ல் வெளியான நாயகன் படத்தில் கமல்ஹாசன் நடித்து இருந்தார். 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைகிறார்கள்.